மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி; 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராணுவ வீரர் பலியானார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2020-12-04 01:28 GMT
அண்ணாதுரை
ராணுவ வீரர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் பழையகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 37). இவர் பீகார் மாநிலத்தில் தாகூர் கஞ்ச் என்ற இடத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது மாமாவின் மகள் ஹேமா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. விடுமுறையில் அண்ணாதுரை தனது சொந்த கிராமமான நெடியம் பழைய காலனிக்கு வந்தார்.

திருமண நாளான நேற்றுமுன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டுக்கு வந்து கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.

மறுபடியும் கோழிக்கறி வாங்குவதற்காக பள்ளிப்பட்டு சென்று விட்டு இரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சாவு
சூரராஜூபட்டை என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஆனால் இங்கிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூரில் உள்ள ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாகனங்கள் வருவதற்குள் படுகாயம் அடைந்த அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார்.

முற்றுகை
இந்த தகவல் அறிந்ததும் நெடியம் பழைய காலனியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் திரண்டு வந்து பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இருந்திருந்தால் ராணுவவீரர் அண்ணாதுரையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்ததும் பள்ளிப்பட்டு போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ராணுவ வீரர் அண்ணாதுரையின் உடல் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்