பலத்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு; அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. முன்னதாக அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி
‘நிவர்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு அதிகரித்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 25-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. 6 நாட்களாக திறந்துவிடப்பட்ட உபரிநீர், கடந்த 30-ந்தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகள் நிரம்பின. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஏரிக்கு 1,050 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 22.23 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,179 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீருக்காக 966 கன அடி நீர் திறக்கப்பட்டது.
மீண்டும் உபரி நீர் திறப்பு
ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியிலேயே வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக 5 கண் மதகு வழியாக 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
உபரி நீரை திறந்து விடுவதற்கு முன்பு, உபரிநீர் திறக்கப்படுவதால் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி செல்போன்களில் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. அத்துடன் 2 முறை எச்சரிக்கை மணியும் ஒலிக்கப்பட்டது.
கலெக்டர் அறிக்கை
மேலும் இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக் டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரெவி புயலால் பெய்து வரும் மழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீராக நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 158 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 22.15 அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் நேற்று மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் காவலூர், குன்றத்தூர், நத்தம் திருமுடிவாக்கம், திருநீர்மலை வழிநிலைமேடு பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கும்
தொடர்ந்து மழை பெய்து, அதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏரியை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக் கப்பட்டனர். இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஏரியை பார்வையிட வந்தனர். அதிகளவில் மீன்களையும் பிடித்து வந்தனர்.
தற்போது மீண்டும் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.