புரெவி புயலால் விடிய விடிய பலத்த மழை: புதுவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர்

புரெவி புயல் எதிரொலியாக புதுவையில் கனமழை கொட்டியது. தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-12-04 01:07 GMT
புதுச்சேரி, 

புதுவை அருகே மரக்காணத்தில் கடந்த 26-ந்தேதி நிவர் புயல் கரையை கடந்த போது சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு புதுச்சேரி திரும்பியது.

இந்தநிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகி உள்ள புரெவி புயல் தமிழகத்தை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையொட்டி புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.

காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். தொடர் மழையால் பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள். சந்தேக நிவர்த்தி வகுப்புகளுக்காக பள்ளிக் கூடத்திற்கு மாணவ, மாணவிகள் நனைந்தபடியே சென்றனர்.

அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளில் முடங்கினர். தேங்கி கிடந்த தண்ணீரை ஆங்காங்கே பொதுப்பணித்துறையினர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர்.

ஜவகர்நகர், அஜந்தா சந்திப்பு உள்ளிட்ட நகரில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க பொதுப்பணி, நகராட்சி, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவற்றை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். உழந்தைகீரப்பாளையத்தில் ஒரு வீட்டில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

புதுவையின் முக்கிய வீதி களான புஸ்சி வீதி, லப்போர்த் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் மழைநீர் தேங்கியது. இதில் நீந்தியபடி சென்ற வாகனங்கள் தொடர் மழையால் போதிய வெளிச்சமின்றி பகலிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு இருந்தன.

பெரிய வாய்க்கால், சின்னவாய்க்கால் உள்ளிட்ட கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்திலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நிவர் புயலின்போது பெய்த மழையினால் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீக்கப்பட்டதால் நேற்றைய மழையின்போது தண்ணீர் வழிந்தோடி பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காமல் போனது. குறிப்பாக இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் நேற்று தேங்கவில்லை. மிதமாகவும், பலத்த அளவிலும் விட்டு விட்டு பெய்ததால் உடனுக்குடன் மழை நீர் வடிந்துகொண்டே இருந்தது.

தொடர்ந்து பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஊசுட்டேரி, வேல்ராம்பேட் ஏரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகம், கடற்கரை பகுதி, காரைக்கால் மீன்பிடி துறைமுகம், அரசலாற்றுப் பகுதியில் விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங் கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

புதுவையில் நேற்று முன் தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 7.6 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை 2.38 செ.மீ. மழை பதிவானது. காரைக்காலில் 16 செ.மீ. மழை பதிவானது.

நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சூரியனின் முகத்தை காண்பதே அரிதாக இருந்தது. தொடர்மழை காரணமாக குளிர்ந்த வானிலை காணப்பட்டது.

காரைக்காலிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கட்டுமான தொழில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறாமல் பொதுமக்கள் முடங்கிப் போனார் கள்.

தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையொட்டி பள்ளிக் கல்வி இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்