டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர்கள் அழைப்பு
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் நாளை (சனிக்கிழமை) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுச்சேரி,
புதுச்சேரி தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ. (தெற்கு), எஸ்.பி. சிவக்குமார் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவாக உள்ளது.
விவசாயத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி புதுச்சேரி, காரைக்கால் தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணியளவில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் மாநில நிர்வாகிகள், பிற அணிகளின் தலைவர்கள், தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.