ரூ.1 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டு உழவர்கரை நகராட்சி அதிரடி

ரூ.1 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை உழவர்கரை நகராட்சி இணையதளத்தில் அதிரடியாக வெளியிட்டது.

Update: 2020-12-04 00:54 GMT
புதுச்சேரி, 

உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான சொத்துவரி செலுத்த வேண்டிய கேட்பு அறிக்கை அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் இந்நகராட்சியால் கொடுக்கப்பட்டு விட்டது. இதன்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.3.95 கோடி மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அதிகப்படியானோர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.

சொத்துவரி என்பது ஒவ்வொரு நிதியாண்டின் ஆரம்ப கட்டத்திலேயே அதாவது ஒரு நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மற்றும் அடுத்த அரையாண்டுக்கு அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். தவறும்பட்சத்தில் சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களில் உள்ள அசையும் பொருட்களை புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி ஜப்தி செய்யப்படும்.

மேலும் சொத்துவரியை கட்டிட உரிமையாளர்கள் செலுத்த தவறினால் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு அல்லது மற்றும் போகியத்திற்கு இருப்பவர்கள் மேற்சொன்ன சொத்துவரியை செலுத்த புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி கடமைப்பட்டவர்கள் ஆவர். அவர்களும் தவறும்பட்சத்தில் சொத்துவரியை செலுத்தாத காரணத்தால் அக்கட்டிடத்தில் வாடகை அல்லது போகியத்துக்கு இருப்பவர்களின் அசையும் பொருட்கள் கண்டிப்பாக ஜப்தி செய்யப்படும்.

சொத்துவரி செலுத்தாத வணிக நிறுவனங்களது வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு ஜப்தி செய்யப்படும். மேலும் ரூ.1 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ள நபர்களின் விவரங்கள் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதலால் சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் சொத்துவரியை உடனே தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் அல்லது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி அல்லது ஜவகர் நகரில் உள்ள நகராட்சியின் கணினி சொத்துவரி வசூல் மையத்தில் செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும். சொத்துவரி பாக்கியை https://lg-r-ams.py.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் கட்டலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்