14, 15-ந் தேதிகளில் சட்டசபை குளிர்கால கூட்டம் மும்பையில் நடக்கிறது - 2 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதற்கு பா.ஜனதா எதிர்ப்பு
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நாக்பூருக்கு பதில் மும்பையில் வருகிற 14, 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது..
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 7-ந் தேதி முதல் நாக்பூரில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தை நடத்த பலரும் விரும்பவில்லை.
இதனால் குளிர்கால சட்டசபை கூட்டத்தை மும்பையிலேயே நடத்தி கொள்வது என்றும், இது தொடர்பாக கவர்னரின் ஒப்புதலை பெறுவது என்றும் நேற்று முன்தினம் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரை நாக்பூருக்கு பதில் மும்பையில் வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக 2 வாரம் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரை கொரோனா காரணமாக வெறும் 2 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. மார்ச் மாத பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்களும் குறைத்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குளிர்கால கூட்டத் தொடரை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்து இருப்பதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் (பா.ஜனதா) தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குளிர்கால கூட்டத் தொடர் அதிக நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் மாநிலத்தில் தீர்க்கப்படாத நிறைய மக்கள் பிரச்சினைகள் உள்ளன. மழை வெள்ளம், பூச்சிகளால் விவசாயிகளின் பயிர் பாதிப்பு, மராத்தா இடஒதுக்கீடு விவகாரம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து சட்டசபையில் நிறைய விவாதிக்க வேண்டியது உள்ளது. ஆனால் சட்டசபையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க அரசு தயாராக இல்லை. இதனால் தான் இரு நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.