மும்பை மேற்கு விரைவு சாலையில் ஓடும் காரில் மது குடித்துக்கொண்டு - விபரீத சாகசம் 3 வாலிபர்கள் கைது
மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் ஓடும் காரில் கதவில் அமர்ந்து மதுகுடித்தப்படி விபரீத சாகசம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் கார் ஒன்று பாந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரில் இரு புறமும் உள்ள கதவு ஜன்னலில் வெளிப்புறமாக 2 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு பீர் குடித்து கொண்டு விபரீத சாகசம் செய்தனர்.
இதனை ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வளைதளத்தில் பரப்பி விட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோ பற்றி அறிந்த மும்பை போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினர். வீடியோவில் பதிவான காரின் பதிவெண்ணை கொண்டு விசாரித்தனர். இதில் காந்திவிலி தாக்குர்காம்பளக்ஸ் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் காந்திவிலியில் இருந்து பாந்திரா வரை இவ்வாறு விபரீத பயணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 3 வாலிபர்களையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விபரீத சாகசம் பயணம் செய்த அவர்களது காரை பறிமுதல் செய்தனர்.