மலம்பட்டி புனித சவேரியார் ஆலய தேர் பவனி திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மலம்பட்டி புனித சவேரியார் ஆலய தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2020-12-04 00:08 GMT
ஆவூர்,

விராலிமலை தாலுகாவில் மலம்பட்டி புனித சவேரியார் ஆலயம் மற்றும் ஆவூர் புனித பெரிய நாயகி மாதா ஆலயம் ஆகிய இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. ஆவூரில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல மலம்பட்டியில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆவூர் பெரியநாயகி மாதா ஆலய தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள நிலையில் மலம்பட்டி புனித சவேரியார் ஆலய தேர் திருவிழா நடத்துவதற்கு மலம்பட்டி கிராம கிறிஸ்தவ நிர்வாகக் குழுவின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அங்கு தேர் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்கு கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1-ந் தேதி அலங்கார சப்பர பவனியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் யூஜின் மற்றும் பொருளாளர் இன்னாசிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.

தேர்பவனி

இதைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் வாணவேடிக்கை முழங்க ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அருட்தந்தை இன்னாசிமுத்து தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் தேர்பவனி நடைபெற்றது. கீரனூர் மறைவட்ட அதிபர் அருட்தந்தை அருளானந்தம் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் இலுப்பூர், விராலிமலை, கீரனூர், ஆலங்குளம், ஆவூர், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த அனைத்து மதத்தினரையும் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக் கடனாக விடப்பட்ட ஆடு, மாடு, கோழிகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணி அளவில் நன்றி திருப்பலியும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ரட்சகராஜ் தலைமையில் கிராம நிர்வாகத்தினர், புனித தாமஸ் சபை அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்