செங்கோட்டை அருகே பண்பொழியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
திடீர் சோதனை
மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது அலி ஜின்னா. இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டிற்கு மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் நேற்று காலையில் திடீரென்று வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அப்போது முகம்மது அலி ஜின்னா வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக கோஷம்
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மற்றும் அமைப்பிற்கு வரும் நிதி தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த அமைப்பினர் முகம்மது அலி ஜின்னா வீட்டின் முன் குவிந்தனர். சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை திசை திருப்புவதற்காக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.