கனகதாசரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டி முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
கனகதாசரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கனகதாசர் ஜெயந்தியையொட்டி பெங்களூரு விதான சவுதா அருகே எம்.எல்.ஏ.க்கள் பவன் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு கர்நாடக அரசு சார்பில் ரவீந்திர கலாஷேத்ராவில் நடைபெற்ற கனகதாசர் ஜெயந்தி விழாவில் எடியூரப்பா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
கனகதாசர், கிருஷ்ணனின் அருமை பக்தர். சமத்துவ கொள்கையை பின்பற்றினார். இதை மக்களிடம் எடுத்துக் கூறினார். அவர் காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டும். கனகதாசரின் வாழ்க்கை நமக்கு ஒரு வழிகாட்டி. மதசார்பற்ற கொள்கையே நமது விருப்பம். அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம்.
கனகதாசர் பிறந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கனகதாசரின் கொள்கைகளை தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அவர் கன்னட இலக்கிய உலகத்திற்கு அபாரமான பங்களிப்பை அளித்துள்ளார். அவரது கீர்த்தனைகளை பாடாத பாடகர்கள் இல்லை. அவரது எளிமை, மதசார்பற்ற கொள்கை எப்போதும் நிலைத்து நிற்கக்கூடியவை. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
கனககுரு பீடத்தின் மடாதிபதி சித்தராமானந்தபுரி சுவாமி பேசுகையில், “கனகதாசர் குறித்து அதிகளவில் ஆராய்ச்சி நடைபெற வேண்டும். கனகதாசர் ஜெயந்தி அன்று விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை வேண்டாம். விடுமுறை கொடுப்பதால் அதிகாரிகள் வீட்டில் அமர்ந்து கொள்கிறார்கள். அதிகாரிகளுக்கு கனகதாசரின் கொள்கைகள் தெரிய வேண்டும். நாட்டில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசுகள், ஏழைகளின் பக்கம் இருக்க வேண்டும். கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்காக அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும்“ என்றார்.
கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கனக விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதிலும் எடியூரப்பா கலந்து கொண்டார். இந்த விழாவில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.