கோவையில் பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த பஸ் பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது - ஸ்கூட்டரில் சென்ற காவலாளி பலி

கோவையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் ஒன்று பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காவலாளி ஒருவர் பலியானார்.

Update: 2020-12-03 16:30 GMT
கோவை,

கோவை உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து நேற்றுகாலை 10.30 மணியளவில் ஒரு தனியார் டவுன் பஸ் (தடம் எண் 3-பி) மதுக்கரைக்கு புறப்பட்டது. பஸ்சை சூலூர் பட்டணத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 38) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. கரும்புக்கடைக்கு முன்பு இடதுபுறம் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே, சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மொபட், ஒரு கார் மீது மோதியது. இதைத் தொடர்ந்து பஸ்சை டிரைவர் இடதுபக்கம் திருப்பினார். இதில் பக்கவாட்டில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதி அவரை இடித்து தள்ளி விட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்குள் பஸ் புகுந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பம்பின் மீது மோதி நின்றது.

இதில் பெட்ரோல் பம்ப் லேசாக சேதமடைந்தது. ஒரு வேளை அந்த பம்ப் மீது பஸ் வேகமாக மோதி இருந்தால், பம்பில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக பஸ் பம்ப் மீது லேசாகத்தான் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஸ்கூட்டரில் சென்றவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதில் இறந்துபோனவர் கிணத்துக்கடவை அடுத்த சங்கராயபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 53) என்று தெரியவந்தது. அவர் கோவையில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை விட்டு ஓடி விட்டனர். விபத்தில் இறந்த ராஜமாணிக்கத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் மோதியதில் மொபட்டில் சென்ற ஒருவர் லேசாக காயம் அடைந்தார். பஸ் மோதியதில் கார் சேதம் அடைந்தது.

இந்த விபத்து தொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்