சாலை வசதி இல்லாததால் அவலம்: டோலி கட்டி நோயாளியை தூக்கி வரும் மலைக்கிராம மக்கள்
சாலை வசதி இல்லாததால், டோலி கட்டி நோயாளிகளை தூக்கி வரும் அவலநிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியின் மேல் பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வெள்ளகவி என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமத்துக்கு போதிய சாலை வசதி கிடையாது.
இங்கு விளையக்கூடிய ஏலக்காய், மிளகு உள்ளிட்ட விளைபொருட்களை தலைச்சுமையாகவும், குதிரையின் மூலமாகவும் விற்பனைக்கு பெரியகுளத்துக்கு மலைக்கிராம மக்கள் கொண்டு வருகின்றனர். இதேபோல் மருத்துவமனைக்கு நோயாளிகளை டோலி கட்டிதான் தூக்கி வரும் அவலநிலை உள்ளது.
இந்தநிலையில் கடந்த 1980-ம் ஆண்டில் கும்பக்கரை அருவி முதல் வெள்ளகவி கிராமம் வரை சுமார் 17 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வவ்வால்துறை என்னும் இடத்தில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் மலைப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெள்ளகவி மலைகிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அக்கிராம மக்கள், 17 கிலோமீட்டர் தூரம் அந்த பெண்ணை டோலி கட்டி தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. சில சமயத்தில் நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.