மணிமுக்தாற்றில் கட்ட இருந்த தடுப்பணை வேறு இடத்துக்கு மாற்றம்: பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை - விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் கட்ட இருந்த தடுப்பணை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பெருந்துறை -பவழங்குடி கிராமங்களுக்கு இடையே மணிமுக்தாறு பாய்ந்தோடுகிறது. இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.11 கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பெருந்துறை -தே.பவழங்குடி இடையே அமைக்கப்பட இருந்த தடுப்பணை கட்டும் திட்டத்தை மாற்றி கோட்டுமுளை அருகே மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக பெருந்துறை கிராம மக்களிடையே தகவல் பரவியது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா சந்திரசேகர் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் பாக்யராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், குணசேகர், கருணாநிதி, தமிழரசன், பூமாலை உள்ளிட்ட பலர் விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களை சமாதானம் செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்ற கிராம மக்கள், பெருந்துறை மணிமுக்தாற்றில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பகுதியில் தடுப்பணை கட்டாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.