மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி குடும்பத்தினருடன் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - 310 பேர் கைது
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 310 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களின் 5 சதவீத முன்னுரிமையுடன் வேலை வழங்க தமிழகத்தில் தனியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும், உதவித்தொகை வழங்காமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் நிர்வாகிகள் கண்ணப்பன், குப்புசாமி, சவுந்தர்ராஜன், குணசேகரன், டில்லிபாபு, குறளரசன், முத்து, முருகன், கவுரி, ஜெயக்குமார், மகாலிங்கம், வேலய்யன் உள்பட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் விக்கிரவாண்டியில் வட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், திண்டிவனத்தில் மாவட்ட தலைவர் பாவாடைராயன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும் ஆக மொத்தம் 3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில 310 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் வானூரில் மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் தலைமையிலும், மேல்மலையனூரில் மாவட்டக்குழு உறுப்பினர் ஷெரீப் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.