மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 103 ஆக உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு விவசாயி ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-12-03 11:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 57 வயது விவசாயிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,447 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று கால்நடை கல்லூரி பேராசிரியர், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,478 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,144 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 103 பேர் பலியான நிலையில் 231 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்