ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2-வது நாள் சுற்றுப்பயணம்

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2-வது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Update: 2020-12-03 05:40 GMT
ஈரோடு,

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசார பயணத்தை தி.மு.க. தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டு உள்ளார். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்த அவர் நேற்று 2-வது நாளாக தனது பயணத்தை தொடங்கினார்.

திண்டல் செங்கோடம் பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்த அவர், அங்கிருந்து சேனாபதிபாளையம் அண்ணாநகர் பகுதி மக்களையும் சந்தித்தார். பின்னர் வெள்ளோடு சென்று அங்குள்ள காலிங்கராயன் மார்பளவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடிய அவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறிது நேரம் பேசினார்.

ஆட்டோ டிரைவர்கள்

அறச்சலூர் புறப்பட்டு சென்ற அவர் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். இதுபோல் சிவகிரியில் தினசரி கூலித்தொழிலாளர்களுடன் பேசினார். நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். மேலும் கனிமொழி எம்.பி.யை விவசாயிகள் நேரில் சந்தித்து ஏர் கலப்பையை வழங்கினர். சிவகிரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் சிலைகளுக்கு கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மொடக்குறிச்சி புறப்பட்டு சென்ற அவர் அங்கு ஐ.டி.பி.எல். (இருகூர்-தேவனகுந்தி பெட்ரோலியம் குழாய்) திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அங்கிருந்து 46 புதூர் ஆனைக்கல்பாளையம் பகுதிக்கு வந்து அங்கு கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத கிராமப்புற பஸ் நிலையத்தை பார்வையிட்டு அதுபற்றி விவரங்களையும் கேட்டு அறிந்தார். பிற்பகலில் காஞ்சிக்கோவில் பகுதிக்கு சென்றார். அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பேசினார். பெருந்துறை சென்ற அவர் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சுண்டக்காம்பாளையம் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்ட அவர் குன்னத்தூர் புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளஞ்செழியன், கொடுமுடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நடராஜ், சிவகிரி பேரூர் செயலாளர் கோபால், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், துணைஅமைப்பாளர் தனசேகர், விவசாய அணிஅமைப்பாளர் ஆர்.பி.சண்முகம், ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் யமுனாதேவி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்