தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி ரெயிலில் அடிபட்டு பலி; கோவை இன்டர்சிட்டி தாமதம்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காவலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார். தூக்கி வீசப்பட்ட பிணம் தண்டவாளத்திலேயே கிடந்ததால், சிறிது நேரத்தில் வந்த மற்றொரு ரெயில்(கோவை இன்டர்சிட்டி) நிறுத்தப்பட்டு, அதன் டிரைவர் பிணத்தை அப்புறப்படுத்தி ரெயிலை இயக்கி சென்றார்.

Update: 2020-12-03 05:09 GMT
தண்டவாளத்தில் இருந்து விஸ்வநாதனின் உடலை உறவினர்கள், ரெயில்வே ஊழியர்கள் அகற்றிய போது எடுத்த படம்; விஸ்வநாதன்
காவலாளி
குடியாத்தத்தை அடுத்த பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 55). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். விஸ்வநாதன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தற்போது தனது சொந்த கிராமத்தில் இருந்தார்.

அவர் நேற்று காலை தனது கிராமத்தை அடுத்த கூடநகரம் ரெயில்வேகேட் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விஸ்வநாதன் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட குடும்பத்தினரும், கிராம மக்களும் ரெயில் தண்டவாளம் பகுதியில் குவிந்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

15 நிமிடம் ரெயில் நின்றது
சிறிது நேரத்தில் அந்த வழியாக கோவையில் இருந்து சென்னையை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடந்ததையும், அதன் அருகில் மக்கள் கும்பலாக இருந்ததையும் ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்து விட்டு, உடனே ரெயிலை நிதானமாக இயக்கி விஸ்வநாதனின் பிணம் கிடந்த இடத்துக்கு சற்று அருகில் நிறுத்தினார்.

என்ஜின் டிரைவரும், ஊழியர்களும் ரெயிலில் இருந்து கீழே இறங்கி வந்து, விஸ்வநாதனின் குடும்பத்தினர், கிராம மக்கள் உதவியோடு அவரின் பிணத்தையும், சிதைந்த உடல் உறுப்புகளையும் சேகரித்து, துணியில் மூட்டையாகக் கட்டி ரெயில் தண்டவாள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி அருகில் வைத்தனர். இதையடுத்து 15 நிமிடத்துக்கு பிறகு கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

போலீஸ் விசாரணை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து, விஸ்வநாதனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்