ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வர வேண்டும் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவினாசி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் போது அரசுத் துறை அதிகாரிகள் கட்டாயம் வர வேண்டும் என்று கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.;

Update: 2020-12-03 04:32 GMT
அவினாசி,

அவினாசி ஊராட்சி ஒன்றிய கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அ.ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரசாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகர், அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் மன்ற பொருள் படித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் முத்துசாமி: கூட்டம் நடைபெறும்போது அந்தந்த துறை அதிகாரிகள் இருந்தால் எளிதில் பயன் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அரசுத்துறை அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு வருவதில்லை. எனவே அடுத்த கூட்டத்தில் இருந்து அனைத்து அரசு துறை அதிகாரிகளும் அவசியம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் கார்த்திகேயன்: அவினாசி கைகாட்டி புதூர் மாரியம்மன் கோவில் முதல் ரங்கா நகர் ரவுண்டானா வரை உள்ள சாலையோர பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அந்த ரோட்டில் காலை முதல் மாலை வரை நிறுத்தி வைக்கப்படும் தனியார் நிறுவன வாகனகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த பகுதியில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை மாற்ற வேண்டும்.

நிறைவேற்றப்படும்

கவுன்சிலர் சேதுமாதவன்: பழங்கரை ஊராட்சி அம்பாள் காலனியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். தேவம்பாளையம் சி.எஸ்.ஐ.காலனியில் மேல்நிலை தொட்டி கட்டித் தர வேண்டும். பெரியாயிபாளையம் வாரச்சந்தைக்கு மேடை நிழற்குடை, மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். தேவம்பாளையம் மற்றும் குளத்துப்பாளையம் மயானங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கவுன்சிலர்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்