சாயல்குடி பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு
சாயல்குடி பகுதியில் புரெவி புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
தண்ணீர் தொட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,500 விசைப்படகுகள், 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. 180 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாயல்குடி அருகே மூக்கையூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம், ரோச் மாநகர், டி.மாரியூர், ஒப்பிலான், மேலமுந்தல், வாலிநோக்கம், கீழமுந்தல் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்தநிலையில் கடலோர மீனவ கிராமங்களில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல்காப்பகம் மற்றும் பேரிடர் மேலாண்மை புகலிட இடங்களில் ஜெனரேட்டர், தண்ணீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைபெற்று வருகிறது. அதனை வருவாய் கோட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு அதிகாரி தங்கவேல் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரப்பன், ஒன்றிய ஆணையாளர் அன்பு கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, வேளாண் உதவி இயக்குனர், தீயணைப்புத்துறை, காவல்துறை, மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆய்வு செய்து வருகின்றனர்.
வலியுறுத்தல்
கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய கட்டிடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இங்குள்ள கடலோர பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் காப்பகங்கள், சமுதாயக்கூடங்கள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.