தனியார் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் கைது
தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி சென்னையில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
தனியார் துறை வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஜான்சிராணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் துறை வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் சட்டப்படி இது நடக்கிறதா? என்றால் கேள்விக்குறிதான். அரசு இந்த விவகாரத்தில் தனியார் துறைகளை வலியுறுத்தாமலேயே இருக்கிறது. எனவே தனியார் துறையில் எங்களுக்கான வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்து, அதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். பொதுத் துறை மற்றும் அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் பின்னடைவு பணியிடங்களை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் நிரப்பிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும், எழும்பூர் தாலுகா அலுவலகம் அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.