புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மதுரையில் 300 இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2020-12-03 00:38 GMT
முதல்அமைச்சர் பழனிசாமியால் நாளை திறந்து வைக்கப்பட உள்ள புதியகலெக்டர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் பார்வையிட்டார்
ஆலோசனை
புரெவி புயலையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது.

புயலால் தமிழகத்தில் சில இடங்களில் 75 கி.மீ. முதல் 95 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். புரெவி புயல் கன்னியாகுமரி, பாம்பனுக்கு இடையே கரையை கடக்க கூடும். இதனால் தென் தமிழகத்தில் கன மழை மற்றும் மிகுந்த கன மழை பெய்யும்.

300 இடங்கள்
மதுரையில் 300 இடங்களில் மழை நீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புரெவி புயல் இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

புரெவி புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல்கள் வருவதற்கு முன்னரே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு
கஜா புயலில் 1 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிவர் புயலில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டனர். புரெவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான் விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும். தி.மு.க.வில் ஒரு புயல் தற்போது உருவாகி வருகிறது.

அந்த புயல் மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க.அழகிரி புயல். அது தி.மு.க.விற்கு நிச்சயமாக சேதாரம் ஏற்படுத்தும் என்று மக்கள் கூறுகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அழகிரி புயல், தி.மு.க.வை தாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்