தூத்துக்குடியில் புயல் மீட்பு பணிக்காக 10 இடங்களில் தீயணைப்பு படையினர் முகாம் - மாவட்ட அலுவலர் குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மீட்பு பணிக்காக தீயணைப்பு படையினர் 10 இடங்களில் முகாமிட்டு உள்ளதாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தெரிவித்து உள்ளார்.
புரெவி புயல்
வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
10 குழுக்கள்
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறும்போது,‘ தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் தீயணைப்பு படையினர் முகாமிட்டு உள்ளனர். இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 10 தீயணைப்பு படையினர் உள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்க வாய்ப்பு உள்ள திருச்செந்தூர் ரோடு, ராஜகோபால்நகர் உள்ளிட்ட 5 இடங்களில் மோட்டார் பம்புகளுடன் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இதே போன்று மறவன்மடம், அந்தோணியார்புரம், அத்திமரப்பட்டி, ஆத்தூர், முக்காணி ஆகிய 5 இடங்களிலும் 5 குழுக்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.
தயார்
மாவட்டத்தில் 3 ரப்பர் படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், மரம் வெட்டும் கருவிகள், அவசர தேவைக்கான விளக்குகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் தயாராக உள்ளனர். அதே போன்று அனைத்து தீயணைப்பு படை வீரர்களும் 24 மணி நேரமும் விடுப்பு இல்லாமல் அலுவலகத்தில் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளோம்’ என்று அவர் கூறினார்.