திருச்செந்தூர் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்க வேண்டும்; அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
திருச்செந்தூர் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்.
கலெக்டருடன் சந்திப்பு
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் டி.என்.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி கட்டிடத்தை உடன்குடி அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.2.50 லட்சம் செலவில் சீரமைப்பு செய்து தர வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும் வீரபாண்டியன்பட்டினம் ரெயில்வே கேட் பகுதியில் உடன்குடி உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம், மேலபுதுக்குடி, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து கருங்காளியம்மன் கோவில் தெரு, தண்டுபத்து பஞ்சாயத்து செட்டிவிளை, மணப்பாடு புதுக்குடியேற்று, ஆழ்வார்திருநகரி வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கால்வாய்
உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளை பஞ்சாயத்து மானாடு தண்டுபத்து கிராமத்தில் 6 ஏக்கர் நிலபரப்பில் உள்ள குளத்தை தூர்வாருவதற்கும், வரத்து கால்வாய் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் கிருஷ்ணநகர் கிராமத்தில் வன்னியராஜா கோவில் அருகிலும், திருச்செந்தூர்-நாகர்கோவில் ரோட்டில் நடுநாலுமூலைக்கிணறு பகுதியிலும் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் உள்ள கீழ நடுநாலுமூலைகிணறு பகுதியில் செயல்படும் பிச்சிவிளை கூட்டுறவு சங்கம் ரேஷன் கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
சாத்தான்குளம்
இந்த நிலையில், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளரும், சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவருமான லூர்துமணி தலைமையில் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, மற்றும் விவசாயிகள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து பாபநாசம் அணையில் இருந்து மருதூர் மேலக்கால் வழியாக புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்துக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘சாத்தான்குளம் பகுதி மக்களின் வாழ்வாதார குளமாக புத்தன்தருவை, வைரவம் தருவை குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை பார்த்து வருகின்றனர். இந்த குளத்தில் நீர் நிரம்பினால் 13 கிராம ஊராட்சி மற்றும் சாத்தான்குளம் பகுதியில் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவ மழை மூலம் பாபநாசம் அணையில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது கன்னியாகுமரி பகுதியில் புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் பாபநாசம்அணை, ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் அதிகரித்தால் அந்த தண்ணீர் வீணாக கடலுக்கு திருப்பி விடும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். புத்தன்தருவை, வைரவம்தருவை குளமானது தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விட கேட்டு இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிம் முறையிட்டு உள்ளோம். ஆனால் சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டும், புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த குளத்துக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அப்போது சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பாலமுருகன், கட்சி பிரமுகர்கள் ஜெயசீலன், சித்திரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வானிலை ஆராய்ச்சியாளருக்கு...
குரும்பூர் பகுதியைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜாவை ஊக்குவிக்க, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மடிக்கணினி வழங்கினார். உடன்குடி தண்டுபத்திலுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.