பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-12-02 23:09 GMT
ஆலங்குளம், சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
ஆர்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும், அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் 100 நாள் வேலைத்திட்டத்தில் இணைக்க வேண்டும், வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா துணைத்தலைவர் பாலு, பீடி சங்க தாலுகா தலைவர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பூலாங்குளம் கிளை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி- சங்கரன்கோவில்
சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சக்திவேல், சுப்பையா, சுப்பிரமணியன், ஜெயக்கொடி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி நகர தி.மு.க. செயலாளர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், பழனி ஆகியோர் பேசினர்.

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட இணைச்செயலர் ஜெயந்தி, அமராவதி ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கும்படியும், இதுதொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்