தென்காசி அருகே நாட்டு வைத்தியர் வீட்டில் கொள்ளையடித்த 4 பேர் கைது; ரூ.4¾ லட்சம் நகைகள் மீட்பு
தென்காசி அருகே நாட்டு வைத்தியர் வீட்டில் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன.;
நாட்டு வைத்தியர்
தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 48). நாட்டு வைத்தியரான இவர் தனது வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டை விற்பனை செய்வதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு கடந்த 19-9-2020 அன்று 6 பேர் வந்து வீட்டை வாங்குவதாக கூறினர். உடனே அந்த வீட்டை காண்பிப்பதற்காக அவர்களை ரவீந்திரன் அழைத்து சென்றார். அப்போது அவருடன் ரவீந்திரனின் அண்ணன் தனபாலும் (62) சென்றார். அந்த வீட்டுக்கு சென்றதும், அவர்கள் திடீரென்று ரவீந்திரனை செல்லோ டேப் மூலம் கட்டிப்போட்டு, கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டனர்.
நகைகள் கொள்ளை
பின்னர் தனபாலை கத்திமுனையில் அங்கிருந்து ரவீந்திரனின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு ரவீந்திரனின் மனைவி மேரி குட்டியை மிரட்டி பழங்காலத்து நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்தனர். இதையடுத்து 6 பேரும் தாங்கள் வந்திருந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ரவீந்திரன் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
தனிப்படை அமைப்பு
கொள்ளை கும்பலை பிடிக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் ஆலோசனைப்படி குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், மாதவன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், சிவகிரி சோதனைச்சாவடி அருகில் வந்த காரை மறித்து அதில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மணிகண்ட ராஜா (வயது 38), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வெண்டன்கோட்டை உளுவன்புரத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் கார்த்திக் (33), கணேசன் மகன் பாலசுப்ரமணியன் (35), திருவாரூர் மாவட்டம் அய்யம்பேட்டை நன்னிலம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (54) என்பதும், ரவீந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் செல்போன் மீட்கப்பட்டன. மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஆனந்தன், வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.