மும்பை பிலிம்சிட்டியை இடமாற்றும் முயற்சியா? உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதில்

மும்பை பிலிம்சிட்டியை உத்தரபிரதேசத்துக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்தார்.

Update: 2020-12-02 22:16 GMT
மும்பை, 

மும்பை நாட்டில் நிதி தலைநகரம் மட்டும் இன்றி சினிமா தலைநகரமாகவும் உள்ளது. இங்கு கோரேகாவ் பகுதியில் உள்ள பிலிம் சிட்டி பிரபலமானது ஆகும். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இந்திப்பட முக்கிய நடிகர்கள் அனைவரும் மும்பையில் தான் உள்ளனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேச அரசு அந்த மாநிலத்தில் பிரமாண்ட பிலிம்சிட்டி ஒன்றை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தி சினிமா தொழில் உத்தரபிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இதில் சதி நடப்பதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் மும்பை வந்துள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரேகாவ் பிலிம் சிட்டியை பார்வையிட்டார்.

மேலும் திரைப்பட பிரபலங்களான அக்‌ஷய் குமார், போனி கபூர், சுபாஷ் கய், மன்மோகன் ஷெட்டி மற்றும் ஆனந்த் பண்டிட் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே மராட்டிய ஆளும் கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் இங்கிருந்து எதையும் எடுத்துச்செல்ல வரவில்லை. நாங்கள் புதிதாக ஒன்றை உருவாக்குகிறோம், அதை நினைத்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.

இது ஒரு திறந்த போட்டி. அனைவருக்கும் ஒரு புதிய உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் வழங்குகிறோம். எனவே எல்லோரும் வளர்ந்து, அவர்களது சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் சிறந்த வசதிகளை வழங்கவேண்டும். இதை செய்யக்கூடியவர் மக்களை பெறுவார்.

1,000 ஏக்கரில் நொய்டாவில் பிரமாண்டமாக அமைய உள்ள திரைப்பட நகரத்திற்கு தேவையான பரிந்துரைகளை பெறவே நான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரபலங்களை சந்தித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத் சுற்றுப்பயணம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், “நொய்டா திரைப்பட நகரத்தின் தற்போதைய நிலை என்ன? லக்னோ மற்றும் பாட்னாவில் மும்பை பிலிம்சிட்டியை உங்களால் உருவாக்க முடியுமா?

முன்பே இதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டன. மும்பை திரையுலகை மற்றொரு இடத்தில் உருவாக்குவது முகவும் கடினம். மும்பை திரைப்பட துறைக்கு புகழ்பெற்ற வரலாறும், கடந்த காலமும் உள்ளது“ என்றார்.

மேலும் செய்திகள்