தாவணகெரே டவுனில் சம்பவம்; நிலத்தை விற்பதாக கூறி ஏராளமான பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி - பெண்ணை கைது செய்து போலீஸ் விசாரணை

தாவணகெரே டவுனில், நிலத்தை விற்பதாக கூறி ஏராளமான பெண்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-12-02 23:00 GMT
பெங்களூரு, 

தாவணகெரே(மாவட்டம்) டவுன் படாவனே பகுதியில் வசித்து வருபவர் பிரீத்தி(வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்களிடம் தனக்கு தாவணகெரே டவுன் அருகே உள்ள ஜி.எச்.பட்டேல் படாவனே பகுதியில் நிலம் உள்ளதாகவும், அதை விற்பனை செய்ய இருப்பதாகவும், அதற்கான பணத்தை தவணை முறையில் செலுத்தினால் போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்களின் மேம்பாட்டுக்காக இதை செய்வதாகவும் அவர் தெரிவித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நிலம் வாங்க ஆர்வமாக இருந்த பெண்களை அழைத்துக் கொண்டு ஜி.எச்.பட்டேல் பகுதிக்கு சென்று ஒரு பெரிய இடத்தையும் காண்பித்துள்ளார்.

அவர் கூறியதை நம்பிய ஏராளமான பெண்கள் தவணை முறையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியும் நிலத்தை பட்டா செய்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது பிரீத்தி முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி இருக்கிறார்.

மேலும் பணத்தை தர முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் அந்த பெண்களுக்கு தங்களை பிரீத்தி ஏமாற்றி மோசடி செய்துவிட்டது தெரியவந்தது. அதாவது நிலத்தை விற்பனை செய்வதாக கூறி பிரீத்தி பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிவிட்டது அந்த பெண்களுக்கு தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் காண்பித்த நிலமும் அவருக்கு சொந்தமானது இல்லை என்று தெரிந்தது.

இதனால் மனமுடைந்த அவர்கள் இதுபற்றி தாவணகெரே படாவனே போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் பிரீத்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்