மேட்டுப்பாளையம் அருகே, ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் எந்திரத்தில் சிக்கி பரிதாப சாவு

ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன், எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-12-02 16:30 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தை அடுத்த சமயபுரம் அருகே கூடுதுறை மலைபகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). கூலி தொழிலாளி. இவரு டைய மகன் விஜயகுமார் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த டிரைவர் லோகேஷ்குமார் (21) என்பவர் நெல்லிதுறையில் உள்ள தனியார் தோட்டத்திற்கு உழவு ஓட்டுவதற்காக டிராக்டரில் நேற்று காலை புறப்பட்டார். அவருடன் சிறுவன் விஜயகுமாரும் டிராக்டரில் அமர்ந்து சென்றார்.

நெல்லித்துறையில் உள்ள தனியார் தோட்டத்திற்கு டிராக்டர் சென்றதும் விஜயகுமார் கீழே இறங்கி வரப்பில் உட்கார்ந்து கொண்டார். லோகேஷ்குமார், தோட்டத்தில் வாழை பயிர்களுக்கு நடுவே உழவு ஓட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வரப்பில் உட்கார்ந்து இருந்த விஜயகுமார் திடீரென்று ஓடிச்சென்று டிராக்டரில் ஏறினார்.

அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயகுமார் எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார். இதனால் டிராக்டரின் பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருந்த ரொட்டேட்டர் எந்திரத்தில் சிக்கியதால் விஜயகுமார் உடல் சிதைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து லோகேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரில் இருந்து தவறி விழுந்த போது எந்திரத்தில் சிக்கி சிறுவன் விஜயகுமார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்