4-ந்தேதி சிவகங்கைக்கு வருகை: முதல்-அமைச்சரை 100 மஞ்சு விரட்டு காளைகளுடன் வரவேற்க ஏற்பாடு
4-ந்தேதி சிவகங்கைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 100 மஞ்சு விரட்டு காளைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் குறைந்ததையொட்டி படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அதோடு வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொடர்பான ஆய்வு நடத்துவதற்கும், வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள்(4-ந்தேதி) வருகிறார்.
இதையொட்டி அவருக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்தவர்களை முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-
4-ந் தேதி அன்று காலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்து கார் மூலம் மணலூர், சக்குடி, பூவந்தி வழியாக சிவகங்கை வருகிறார். அவருக்கு மணலூர், பூவந்தி மற்றும் திருமாஞ்சோலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது தவிர சிவகங்கை எல்லையான ரிங்ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் வரிசையாக நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர். இதே போல் மாலையில் அவர் திரும்பி செல்லும் போதும் ரிங் ரோடு வரிசையில் நின்று அ.தி.மு.க.வினர் வழியனுப்புவார்கள்.
மேலும் நமது பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடையை நீக்கி அனுமதி பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் 100 மஞ்சுவிரட்டு காளைகள் வைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்திற்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக முதல்-அமைச்சரிடம் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்து உள்ளோம். அத்துடன் சிவகங்கைக்கு வரும் அவர் பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இதுதவிர விவசாயிகளின் பாதுகாவலராக திகழும் நமது முதல்-அமைச்சர் நமது நீண்ட நாள் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
எனவே சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சி, மற்றும் 3 நகராட்சி பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச்செயலாளர் கருணாகரன், ஆவின் தலைவர் அசோகன், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏ.வி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.முருகானந்தம், ஓய்வுபெற்ற சார்பதிவாளர் இளங்கோவன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை தலைவர் வக்கீல் ராஜா மற்றும் நகர் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மானாகுடி சந்திரன் நன்றி கூறினார்.