கோர்க்காட்டில் மாசு கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து சாலைமறியல்

கோர்க்காட்டில் மாசு கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-01 22:15 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் தொகுதி கோர்க்காடு பேட் புதுநகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் குடிநீர் இணைப்பு சேதமடைந்ததால் கடந்த சில நாட்களாக மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோர்க்காடு - வில்லியனூர் சாலை சந்திப்பில் நேற்று காலை ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள் முன்னாள் நகர்மன்ற தலைவர் தெய்வநாயகம் தலைமையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கரிக்கலாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டம் செய்தனர். இதுபற்றி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர், கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு காண்பதற்காக ஆணையர் உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் கோர்க்காடு - வில்லியனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்