ரூ.70½ கோடி நிலுவை: வரி செலுத்தாதவர்களின் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
உள்ளாட்சி துறைக்கு ரூ.70½ கோடி வரி செலுத்தாதவர்களின் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி நேற்று உள்ளாட்சி துறை செயலாளர் ஜெயந்த் ராய் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வரி வருவாயை வசூலிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி துறை மூலமாக வரவேண்டிய வரி வருவாய் கடந்த 31-10-2020 அன்று ரூ.70 கோடியே 45 லட்சத்து 12 ஆயிரத்து 96 நிலுவையில் இருந்தது. உள்ளாட்சி துறையினர் தங்கள் பணியை செய்வதில் தோல்வி அடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்ய வேண்டும்.
வரியை செலுத்தாதவர்களின் விவரங்களை அவர்களுடைய புகைப்படத்துடன் வெளியிட வேண்டும். நிலுவை வைத்திருப்பவர்களின் இடத்தின் அருகிலும், உரிமத்தை புதுப்பிக்கும் போது இணைய தளத்திலும் அவர்கள் பற்றிய தகவலை வெளியிட வேண்டும்.
நிலுவை வரியை வசூலிக்க இன்னும் 2 வாரத்தில் துறை ரீதியான கொள்கைகள் வெளியிடப்படும்.
அதிகபட்சமாக புதுச்சேரி நகராட்சியில் ரூ.33 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 142-ம், உழவர்கரை நகராட்சியில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரத்து 435-ம், காரைக்காலில் ரூ.9 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரத்து 738-ம், மாகியில் ரூ.17 கோடியே 69 லட்சத்து 42 ஆயிரத்து 738-ம், ஏனாமில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 85 ஆயிரத்து 43-ம் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.