போலீஸ் எனக்கூறி மர்மநபர் கைவரிசை: கேரள நகை பட்டறை ஊழியரிடம் தங்க கட்டிகள்-ரூ.3½ லட்சம் பறிப்பு - வழிப்பறி கொள்ளையனுக்கு வலைவீச்சு
சென்னை வந்த கேரள நகை பட்டறை ஊழியரிடம், போலீஸ் எனக்கூறி வழிப்பறி கொள்ளையன் தங்க கட்டிகள் மற்றும் ரூ.3½ லட்சம் பறித்து சென்றார்.
பெரம்பூர்,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கேரளாவில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய பட்டறையில் வேலை செய்து வருபவர் மனோஜ் குமார் (வயது 40). மனோஜ்குமார் கேரளாவில் இருந்து, சென்னையில் உள்ள தங்க வியாபாரிகளிடம் தங்க கட்டிகளை கொடுத்துவிட்டு வேறு நகைகளை வாங்கிச் செல்ல 195 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.3½ லட்சம் பணத்துடன் வந்துள்ளார்.
இந்தநிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு என்.எஸ்.சி.போஸ் சாலையில் வந்த போது, மர்மநபர் ஒருவர் அவரை வழிமறித்து தன்னை போலீஸ் என கூறி பேச்சு கொடுத்தார்.
அப்போது அந்த நபர் ‘கையில் என்ன வைத்திருக்கிறாய்?, பெட்டியில் வைத்துள்ள பணம் மற்றும் தங்க கட்டிகளுக்கான ரசீதை காட்டு’ என்று மனோஜ்குமாரிடம் கூறியுள்ளார்.
அவர் ஆவணங்கள் இல்லை என்று கூறியதையடுத்து, முறையான ரசீது ஆவணங்களை போலீஸ் நிலையத்திற்கு வந்து காட்டி நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி விட்டு மாயமானார். அந்த மர்ம நபரை எங்கும் தேடியும் காணாததால் யானைக்கவுனி போலீசில் மனோஜ் குமார் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழிப்பறி திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்
இதேபோல் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் மகேந்திரன் என்பவரிடம் மர்மநபர்கள் வெள்ளிக்கட்டிகளை வழிப்பறி செய்ததாக புகாரின்பேரில், ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.