நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை - அமைச்சர் சரோஜா பேட்டி

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Update: 2020-12-01 21:40 GMT
சந்திரசேகரபுரத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அமைச்சர் சரோஜா அடிக்கல் நாட்டியபோது எடுத்த படம்.
மாணவர் சேர்க்கை
ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கும், பட்டணம் பேரூராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சரோஜா கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீட்டால் நாமக்கல் மாவட்டத்தில் 7 பேருக்கு பொது மருத்துவம், 3 பேருக்கு பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்காக கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அமைச்சர் வாழ்த்து
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க 1092 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் சமூகநலம், சமூக பாதுகாப்பு, காவல், உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து உடனடியாக போலீஸ் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை பெற்ற ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட 3 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், தனது சொந்த செலவில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கினார். இதனை பெற்று கொண்ட மாணவ, மாணவிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சரவணன், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, ஒன்றிய கவுன்சிலர் மணிவேம்பு சேகரன், பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பொன்குறிச்சி முருகேசன், ஒன்றிய பொருளாளர் கரட்டுக்காடு மணி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராதா சந்திரசேகர், சந்திரசேகரபுரம் ஊராட்சி தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் முத்துசாமி, பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்