பா.ஜனதாவினரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; வலங்கைமானில் நடந்தது
பா.ஜனதா கட்சியினரை கண்டித்து வலங்கைமானில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
பா.ஜனதா கட்சியினரை கண்டித்து...
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியினர் அநாகரிகமான முறையில் செயல்பட்டதை கண்டித்தும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, அலுவலகத்தை பூட்டியதை கண்டித்தும், பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முயற்சி செய்ததை கண்டித்தும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலங்கைமான் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். இதில் சங்க மாநில பொறுப்பாளர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினரை கைது செய்யக்கோரி நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டச்செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளை இணைச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட தணிக்கையாளர் கீர்த்திவாசன், மாவட்ட தலைவர் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.
குடவாசல்
அதேபோல் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை தரக்குறைவாக பேசி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனத்தில் இருந்த அரசு முத்திரை சின்னத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி குடவாசல் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குரு அண்ணாதுரை தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, வட்ட துணைத்தலைவர் நெடுஞ்சேரலாதன், வட்ட இணைச்செயலாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முடிவில் வட்ட செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.