தமிழக பகுதியில் இருந்து வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் அதிகாரியிடம் சபாநாயகர் வலியுறுத்தல்

தமிழக பகுதியில் இருந்து வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் சிவக்கொழுந்து வலியுறுத்தினார்.;

Update: 2020-12-01 00:50 GMT
புதுச்சேரி, 

லாஸ்பேட்டை பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தொடர்ந்து அதை தடுக்கும் விதமாகவும், புதிய காவல்நிலைய கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், காவலர் பற்றாக்குறையை போக்கிடவும் சபாநாயகர் சிவக்கொழுந்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, இரவு நேரத்தில் ரோந்துப்பணியை தீவிரப் படுத்த முடிவு செய்யப்பட்டது. காவலர்கள் பற்றாக்குறை தொடர்பாக வரும் பொங்கல் பண்டிகைக்குள் காவலர்களை பணிநியமனம் செய்ய முயற்சி எடுப்பதாகவும், சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிநியமனம் தொடர்பான கோப்புகளை தயார் செய்து வருவதாகவும் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குறிஞ்சிநகர் பூங்கா, தாகூர் கலைக்கல்லூரி மைதானம், விமான தளத்தை ஒட்டியுள்ள இடங்களுக்கு அடிக்கடி ரோந்து சென்று தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகர் சிவக்கொழுந்து கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்