பா.ஜனதா எம்.எல்.ஏ. தள்ளிவிட்டதால் அடிவயிற்றில் காயம் குழந்தையின் வளர்ச்சி சரியில்லாததால் கருவை கலைத்த பெண் கவுன்சிலர்

பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் கவுன்சிலருக்கு, அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தையின் வளர்ச்சி சரியில்லாததால் அவர் தனது கருவை கலைத்த சோக சம்பவம் பாகல்கோட்டை அருகே நடந்து உள்ளது.

Update: 2020-11-30 23:34 GMT
பெங்களூரு, 

பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி பனகட்டி தாலுகாவில் உள்ள மகாலிங்கபுரா நகராட்சிக்கு கடந்த மாதம்(நவம்பர்) தலைவர், துணை தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடந்தது.

இதையடுத்து பா.ஜனதா கவுன்சிலரான சாந்தினி நாயக், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மகாலிங்கபுரா நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ராபகவி பனகட்டியை சேர்ந்த பா.ஜனதா தலைவர்கள் மறுத்து விட்டனர். இதனால் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக சாந்தினி நாயக் போராட்டம் நடத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தெரதால் பா.ஜனதா எம்.எல்.ஏ. சித்து சவதி, சாந்தினி நாயக்கிடம் தகராறு செய்தார். இதனால் கோபம் அடைந்த சாந்தினி, சித்து சவதி எம்.எல்.ஏ.வை நோக்கி வேகமாக சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரம் அடைந்த சித்து சவதி எம்.எல்.ஏ., பெண் உறுப்பினர் சாந்தினி நாயக்கை பிடித்து கீழே தள்ளினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவியது. பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது என்று சித்து சவதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மகாலிங்கபுராவில் நேற்று சாந்தினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் 3 மாத கர்ப்பமாக இருந்தேன். மகாலிங்கபுரா நகராட்சி தேர்தல் தொடர்பாக நடந்த தகராறின் போது சித்து சவதி எம்.எல்.ஏ. என்னை பிடித்து கீழே தள்ளினார். இதனால் எனது அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்கேன் எடுத்து பார்த்த போது குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று கூறிவிட்டனர். இதனால் எனது கருவை கலைத்து விட்டேன். எனது இந்த நிலைக்கு காரணமான சித்து சவதி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்