திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் வெள்ளி கவசம் திறப்பு

கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள வெள்ளி கவசம் திறக்கப்பட்டது.

Update: 2020-11-30 23:11 GMT
திருவொற்றியூர்,

தொண்டை மண்டல சிவதலங்களான 32 திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர் மீது ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் வெள்ளி கவசம், கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆதிபுரீஸ்வரர் மீதான வெள்ளி கவசம் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2-வது நாளான நேற்றும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

அதன்பிறகு நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் ஆதிபுரீஸ்வரர் வெள்ளி கவசத்தால் மூடப்படுவார். வெள்ளிகவசம் திறக்கப்பட்ட 3 நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இருப்பினும் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வழக்கமாக நடைபெறும் தியாகராஜசுவாமி மாடவீதி உலா வரும் உற்சவம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் 72 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுடன் வரவேண்டும்.

உள்ளூர் பக்தர்கள் அவரவர் அடையாள அட்டையை தவறாமல் எடுத்து வரவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். வரிசையில் வரும் பக்தர்கள் போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

அமர்வு தரிசனம், அர்ச்சனைகளுக்கு அனுமதி இல்லை. விபூதி, குங்குமம், தைல பிரசாதங்கள் பொட்டலங்களாகவும், டப்பாக்களிலும் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சித்ராதேவி செய்து உள்ளார்.

மேலும் செய்திகள்