குமரி போலீசார் நடவடிக்கை; காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிப்பு - நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

குமரி மாவட்ட போலீசார் நடவடிக்கையால் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2020-11-30 23:03 GMT
நெல்லை, 

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளில் செல்கிறவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை மீறி செயல்படுகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி சிலர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அவ்வாறு அபராதம் விதிக்கும்போது, சில குளறுபடிகள் நடக்கின்றன. அதாவது காரில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் தரப்பில் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதுபோல் தான் தற்போது காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் ஆபிரகாம் டேவிட். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 7-9-2020 அன்று குமரி மாவட்ட போலீசார் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்.

அதில், நீங்கள் காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்று உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த தொகையை ஆன்லைனில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம் டேவிட் உடனடியாக அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தினார்.

மேலும், இது தொடர்பாக நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர், வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்