தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). இவர் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி கிராமத்தில் 6 சென்ட் வீட்டுமனை வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய இணையதளத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆனால், காலதாமதம் ஆனதால் பட்டா மாற்றம் குறித்து கேட்பதற்காக கொடிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சங்கர் சென்றார். அப்போது அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் பட்டாவுக்கு பெயர் மாற்றி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் சங்கரிடம் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாற்றி தருவதாக ராஜசேகர் கூறியதாக தெரிகிறது. ஆனால், பணம் கொடுக்க விரும்பாத சங்கர் இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சங்கரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்து, ராஜசேகரிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சங்கர் பணத்துடன் சென்றார். அங்கு இருந்த ராஜசேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு எக்ஸ்கால், இன்ஸ்பெக்டர்கள் அனிதா, ராபின் ஞான சிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் போலீசார் கையும் களவுமாக ராஜசேகரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் உள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்த சங்கத்தில் இருந்து சிலர் பிரிந்து மற்றொரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். அதில் தற்போது கைது செய்யப்பட்ட ராஜசேகர் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.