ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றை ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள் - மேம்பாலம் கட்டுமான ஏணிகளில் ஏறிச்செல்லும் அபாயம்

ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றை கடக்க மேம்பாலம் கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் ஏணிகளில் ஆபத்தான முறையில் ஏறிச்செல்கின்றனர்.

Update: 2020-11-30 23:00 GMT
ஊத்துக்கோட்டை, 

‘நிவர்’ புயல் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு அணை கடந்த 25-ந் தேதி முழுவதுமாக நிரம்பியது. இதனை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்வோர் மாற்றுப்பாதையில் 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், பெருஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, நந்திமங்கலம், மேலகரமன்னூர் உட்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று, 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. இந்த பகுதிகளில் இருபுறங்களிலும் தற்காலிக இரும்பு பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 30 கிராம மக்கள், அங்குள்ள மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஏணிகளை பயன்படுத்தி ஆரணி ஆற்றை கடந்து வருகின்றன. சுமார் 15 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏணிகள் மீது ஆபத்தான முறையில் வந்து செல்கின்றனர்.

இப்படி ஏணிகளில் ஏறும்போது சிலர் தடுமாறி கீழே விழும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. எனவே அதிகாரிகள் ஆற்றைக் கடக்க மாற்று வழி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்