அப்பாவி பெண் அம்மாசை கொலை வழக்கு: வக்கீல் தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய அப்பாவி பெண் அம்மாசை கொலை வழக்கில் வக்கீல் தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.;
இது பற்றிய விவரம் வருமாறு:-
அப்பாவி பெண் கொலை
கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரிவை சேர்ந்தவர் இ.டி.ராஜவேல் (வயது 52). இவருடைய மனைவி மோகனா (48). இருவரும் வக்கீல் ஆவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகனா ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதனால் அவரை ஒடிசா போலீசார் தேடி வந்தனர்.
அதில் இருந்து தனது மனைவியை காப்பாற்ற ராஜவேல் கோவை ரத்தினபுரியை சேர்ந்த அம்மாசை (45) என்ற அப்பாவி பெண்ணை கொன்றார். பின்னர் அவர் தனது மனைவி இறந்துவிட்டார் என்று நாடகமாடி இறப்பு சான்றிதழ் பெற்று மனைவி மோகனா மீதான ரூ.12 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய, ஒடிசா போலீசாருக்கு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
வெளியே தெரிந்தது
சில மாதங்கள் கழித்து வக்கீல் ராஜவேல், கோவை கணபதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் தனது மனைவி மோகனா பெயரில் சொத்து ஒன்றை பதிவு செய்ய முயன்றார். அவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், இறந்தவர் மீது சொத்து பதிவு செய்ய முடியாது என்று கூறி மறுத்தார். இதைத் தொடர்ந்து மனைவியின் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய கோவை மாநகராட்சிக்கு ராஜவேல் விண்ணப்பித்தார். இதனால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் விசாரித்தபோது தான் அப்பாவி பெண் அம்மாசை கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிஉலகுக்கு தெரியவந்தது.
கைது செய்தனர்
இதை தொடர்ந்து அம்மாசை கொலை தொடர்பாக வக்கீல் ராஜவேல், அவருடைய மனைவி மோகனா, ராஜவேலின் கார் டிரைவர் பழனிசாமி, உதவியாளர் பொன்னரசு ஆகியோரை போத்தனூர் போலீசார் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது கொலை உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பொன்னரசு அப்ரூவர் ஆனதால் அவர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். இதனால் மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.
கோர்ட்டில் விசாரணை
கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 51 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 91 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அம்மாசை அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரது உடலை ஏற்றி சென்ற கார் ஆகியவையும் இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களாக போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 11.2.2015 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொலையுண்ட அம்மாசையின் மகள் சகுந்தலா, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. அதன் பின்னர் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் வாதம் மற்றும் குறுக்கு விசாரணை முடிந்து வழக்கு கடந்த 21-ந் தேதி இறுதி கட்டத்தை எட்டியது. இந்த வழக்கில் 30-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி அப்துல் பரூக் அறிவித்தார். அதன்பேரில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் ஆஜரானார்.
குற்றவாளி என்று அறிவிப்பு
தீர்ப்பையொட்டி குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் தம்பதியினர் ராஜவேல், மோகனா மற்றும் அவரது கார் டிரைவர் பழனிசாமி ஆகியோர் கோவை கோர்ட்டில் நேற்றுக்காலை 10.30 மணிக்கு ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கோர்ட்டு வளாகத்தில் உள்ள காத்திருக்கும் அறையில் அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அப்துல்பரூக் அறிவித்தார். இதுகுறித்து ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி 3 பேரையும் பார்த்து கேட்டார்.
அதற்கு ராஜவேல் நான் உடல்நிலை சரியில்லாதவன். மேலும் எனக்கு குழந்தைகள் உள்ளனர். எனவே தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இதைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கோர்ட்டு மீண்டும் கூடியது. அப்போது குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட வக்கீல் ராஜவேல், அவருடைய மனைவி மோகனா, டிரைவர் பழனிசாமி ஆகியோர் கோர்ட்டுக்குள் அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து தண்டனை விவரங்களை நீதிபதி வாசித்தார்.
அதன்படி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (பி) (மோசடி) ன் கீழ் ராஜவேல் மற்றும் மோகனாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார். இந்திய தண்டனை சட்டம்-302 (கொலை) -ன் கீழ் ராஜவேலுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 2 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், மோகனா மற்றும் பழனிசாமி ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம்-302 உடன் இணைந்த 109 (குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்) -ன் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 2 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்படும். இதே போல இந்திய தண்டனை சட்டம் 201 (தடயங்களை மறைத்து பொய்யான தகவலை அளித்தல், 420 (மோசடி) , 468 (ஏமாற்றும் நோக்கத்தில் போலியான ஆவணங்களை தயாரித்தல்) ஆகிய பிரிவுகளின் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம் 471 (போலி ஆவணங்களை அசல் ஆவணங்களாக பயன்படுத்துதல்), பிரிவின் கீழ் ராஜவேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவு
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அப்துல் பரூக் உத்தரவிட்டார். இதனால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய அம்மாசை கொலை வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டதையொட்டி அந்த தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு ஏராளமான வக்கீல்கள் வந்திருந்தனர்.
மேலும் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நடைமுறைகளை காண கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
எனது அம்மாவின் ஆத்மா சாந்திஅடையும்: தீர்ப்பு குறித்து அம்மாசையின் மகள் உருக்கம்
தீர்ப்பு குறித்து அம்மாசையின் மகள் சகுந்தலாதேவி கூறுகையில், உண்மைக்கு நீதி கிடைத்து விட்டது. அம்மாவின் ஆத்மா இன்று தான் சாந்தி அடைந்து உள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை துப்பு துலக்கிய போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சகுந்தலா தேவியின் கணவரும், அம்மாசை கொலை நீதிக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஆதிகணேசன் கூறுகையில், இந்த தீர்ப்பு வரவேற்கக் கூடியது. வழக்கு தொடர்பாக உதவி கேட்டு வந்த அப்பாவி பெண்ணை கொலை செய்தது ஏற்க முடியாதது. தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனையை கோவை கோர்ட்டு வழங்கி உள்ளது என்றார்.