குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - கலெக்டர் தகவல்

குடியாத்தம் தாலுகா கொண்டசமுத்திரம் ஊராட்சி பிச்சனூர் காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2020-11-30 19:37 GMT
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
அப்போது அவர் கூறியதாவது:-

புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1000 எக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகள் இணைந்து கணக்கெடுப்பு பணியை முடிந்தபின் அரசுக்கு அறிக்கை அளித்ததும், உடனடியாக நிவாரண உதவி வழங்கப்படும். வேலூர் மாவட்டத்திற்கு மத்திய குழு சேதங்களை பார்வையிட வரும் வாய்ப்பு உள்ளது.

குடிமராமத்து திட்டப்பணிகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆழ்துளை கிணறு போட்டால் 400 முதல் 450 அடி ஆழத்திலேயே தண்ணீர் வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 102 ஏரிகளில் 14 ஏரிகள் ரூ.4 கோடியே 69 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது 4 மணி நேரத்தில், 400 களப்பணியாளர்களை கொண்டு பல ஆயிரம் பேரை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கைகளால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்துக் கட்டி உள்ள வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படும். ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது, அப்பகுதியில் வீடுகளை கட்டி வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு, அதில் வீடுகள் கட்டித் தரப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்