திருக்கார்த்திகை திருவிழா கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
நெல்லை,
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் திருக்கார்த்திகை விழா நடைபெறும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் சுவாமி சன்னதியில் உள்ள மகா மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கார்த்திகை நாளான நேற்று காலை ஹோம பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்துக்கு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பரணி தீபத்தை கோவில் அர்ச்சகர் தலையில் சுமந்தவாறு புறப்பட்டார். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி, அம்பாள் ஊர்வலமாக சொக்கப்பனை முக்கிற்கு வந்தனர்.
அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அங்கு நிறுவப்பட்டிருந்த மகா ருத்ர தீபமான சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதே போல் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், சந்திப்பு மீனாட்சி- சுந்தரரேசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது.
சேரன்மாதேவி - களக்காடு சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் எளிய முறையில் திருவிழா நடத்தப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மலை உச்சியில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்பாள் தத்ரூபமாக காட்சி அளிப்பது போன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்திலேயே திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் கோவில் இந்த கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, முக்கூடலில் உள்ள அனைத்து கோவில் களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இரவில் கோவில்களின் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அனைத்து வீடுகளிலும் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கோவில் வளாகத்திற்குள் பாலமுருகன் சன்னதி முன்பு மற்றும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் ஆகிய இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படும். அதனை சுவாமியும், அம்பாளும் சப்பரத்தில் வந்து பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பாலமுருகன் சன்னதி முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் கோவில் வளாகத்திற்குள்ளேயே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை சுவாமி-அம்பாள் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னியம்மன், நாகமம்மா சுவாமிகளுக்கு கார்த்திகை தீப திருவிழா சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி மாலையில் கோவில் முழுவதும் 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மாலையில் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பனவடலிசத்திரம் அருகே அண்ணாமலைபுதூர் கிராமத்தில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் தலையில் தீபம் ஏற்றி ஊர்வலமாக செல்வது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து அருணாசலம், ஆனந்த் ஆகியோர் தலையில் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.