செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் 300 கனஅடி வெளியேற்றம்: மதகுகளின் ஷட்டரில் சிக்கிய ஆகாய தாமரை செடிகள் அகற்றம்
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் தற்போது 300 கனஅடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு மதகுகளின் ஷட்டரில் சிக்கிய ஆகாய தாமரை செடிகளை அதிகாரிகள் அகற்றினர்.
பூந்தமல்லி,
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் மற்றும் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி முதற்கட்டமாக ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது. மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அதிகபட்சமாக 9 ஆயிரம் கனஅடி வரை ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
கடந்த 3 தினங்களாக மழை பொழியாத நிலையிலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வந்து கொண்டிருந்தது, பின்னர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் ஏரிக்கு நீர்வரத்து நின்றது.
இந்தநிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் நீரின் மேல் படர்ந்து இருந்தது. ஐந்து கண் மதகுகள் வழியாக உபரி நீரை வெளியேற்றும் போது ஆகாயத்தாமரை செடிகள் அடித்து வரப்பட்டு, மதகின் ஷட்டரில் சிக்கிக் கொண்டது. இதனை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு வந்து ராட்சத மிதவை எந்திரத்தை ஏரிக்குள் இறக்கி, மதகின் ஷட்டரில் சிக்கியுள்ள செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் தீவிரம் காட்டினர். நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாகவும், கொள்ளளவு 3,120 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 300 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த 5 நாட்களாக குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை முடக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். தற்போது அந்த சாலை வழியாக நீர் குறைந்த அளவு செல்வதால் சாலையை சீரமைக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.