பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணி 2 நாட்களில் முடிக்கப்படும் - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கடலூர் மாவட்டத்தில் பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணி 2 நாட்களில் முடிக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் மூலம் நிவர் புயல் சேத விவரங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, நிவர் புயலால் பசு மாடுகள், ஆடுகள், கன்று குட்டி, கூரை வீடுகள் உள்ளிட்டவற்றை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், நிவர் புயலின் போது மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் இன்றி பாதுகாக்க முடிந்தது.
25-ந் தேதி இரவு நிவர் புயலால் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கடலூரில் 282.2 மி.மீ. மழையும், சராசரியாக 120.57 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அப்போது முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதிகள் மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் வசித்த 17,186 குடும்பங்களை சேர்ந்த 52,226 மக்கள், மாவட்டத்தில் உள்ள 441 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயலின் போது பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் 95 குடிசை வீடுகள் முழுமையாகவும், 642 குடிசைகள் பகுதியாகவும், 174 நிலையான வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. மேலும் 94 ஆடுகள், 53 மாடுகளும், 6,300 வாத்துகள், 5,500 கோழிகளும் செத்துள்ளன.
இதுவரை கணக்கெடுக்கப்பட்டதில் 4,770 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களும், 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி வகை பயிர்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் 1,500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் இன்னும் 2 நாட்களில் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து விடும். பின்னர் அதன் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இதுதவிர மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில், மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் அப்பகுதிகளில் கொசு மருந்து மற்றும் பிளிச்சீங் பவுடர் உள்ளிட்டவை தெளித்து, நோய் தொற்று ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.