கல்வராயன்மலையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ் மண்மேட்டில் மோதி விபத்து
கல்வராயன் மலையில் சேறும் சகதியுமான சாலையில் சென்ற அரசு பஸ் மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் 171 கிராமங்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் சென்று வர கச்சிராயப்பாளையம் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து தினந்தோறும் 5 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர இருசக்கர வாகனம், லாரி, வேன் என நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கல்வராயன் மலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் வெள்ளிமலை சாலை முழுவதும் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக கொடுந்துறை வளைவு, மேல்பரிக்கம் வளைவு பகுதிகளில் அதிக அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து வெள்ளிமலைக்கு வந்த அரசு பஸ் மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டது. கொடுந்துறை வளைவு அருகே சேறும், சகதியுமான பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கம் உள்ள மண் மேட்டில் பஸ் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு மாற்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் கூறும்போது, மண்சரிவு காரணமாக இங்குள்ள சாலையில் 1 அடி உயரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேறும், சகதியுமாகவே உள்ளது. இதனால் பஸ் உள்ளிட்ட எந்த ஒருவாகனமும் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் கூட வர முடியாது. எனவே இங்குள்ள மக்களின் நலன் கருதி சாலையில் உள்ள சேற்றை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.