ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 18,259 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் என 18 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 16-ந்தேதி முதல் வருகிற 15.12.20-ந்தேதி வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியின்போது வருகிற 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். திருத்தங்கள் செய்ய விரும்புவோர் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்களில் அளிக்கலாம்.
இந்தச் சுருக்க முறை திருத்தப் பணிகளை மேற்பார்வையிடும் பொருட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர். கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பணிகளை பார்வையிட ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகிற 15-ந்தேதி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சேர்க்கை விண்ணப்பங்கள், நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் என மொத்தம் 18 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை உள்ளவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம்.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் வருகிற 12, 13-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் 2-வது முறையாக நடைபெற உள்ளது. அந்த நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் குறித்த மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதுமான விண்ணப்பங்கள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயது உடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி உள்ளது. எனவே வருகிற 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தத் தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.