குடவாசலை சேர்ந்த ராணுவ வீரர் திடீர் மரணம் சொந்த ஊரில் உடல் தகனம்

குடவாசல் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் திடீர் என்று மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-11-29 01:59 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தேதியூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 38). இவர், சிக்கிம் மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி இவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் உடனடியாக அவரை அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவலை ராணுவ உயர் அதிகாரிகள், தேதியூரில் உள்ள கோபாலகிருஷ்ணனின் மனைவி சத்யாவிற்கு தெரிவித்தனர். மேலும் சிக்கிமில் கோபாலகிருஷ்ணன் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தியதுடன் உடலை விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் தகனம்

பின்னர் அங்கிருந்து அவரது உடலை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அவரது உடல் வந்த ஆம்புலன்ஸ் நேற்று காலை 7 மணிக்கு தேதியூர் வந்து சேர்ந்தது. அங்கு கோபாலகிருஷ்ணனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய ராணுவ தளபதி சார்பில் கும்பகோணம் நம்பர் 8 தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார் எஸ்.லோகன், திருச்சி மண்டல கமாண்டர் சார்பில் அவில்தார் ஜி.ரமேஷ், தேசிய மாணவர் படை சார்பில் இரண்டாம் நிலை அலுவலர் இளையராஜா, தமிழக அரசின் சார்பில் குடவாசல் தாசில்தார் ராஜன் பாபு மற்றும் திருவாரூர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சங்கம், கும்பகோணம் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மறைந்த ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணனின் உடல் தகனம் நடந்தது. முன்னதாக கோபாலகிருஷ்ணன் உடலுக்கு மகள் சனா தீ மூட்டினார். உறவினர்கள் நண்பர்கள் பலர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

17 ஆண்டுகளாக...

மரணம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 22.9.82-ம் ஆண்டு பிறந்தவர். இவர், கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி.யும், அதனைத்தொடர்ந்து எம்.பி.ஏ.வும் படித்து கடந்த 17 ஆண்டுகளாக ராணுவத்தில் புனே, டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம் போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 9 வயதில் சனா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

மேலும் செய்திகள்