வெவ்வேறு இடத்தில் சம்பவம்: ஒரே நாளில் தந்தை-மகன் சாவு பொன்னமராவதியில் பரிதாபம்

பொன்னமராவதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த சம்பவத்தில் ஒரே நாளில் தந்தை- மகன் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2020-11-29 01:03 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன் புதுப்பட்டி பகச்சி ஆசாரி வீதியை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவரது மகன் திருப்பதி(46). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வீரன்செட்டி ஊரணி பகுதியில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறினார்.

அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையும் சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் புதுப்பட்டி சேங்கை ஊரணியில் திருப்பதியின் தந்தை ராமன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர், எதிர்பாராதவிதமாக ஊரணியின் படியில் இருந்து வழுக்கி தண்ணீருக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை யாரும் கவனிக்காததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்.

ஒரேநாளில் அடுத்தடுத்து தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்