நெல்லையில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் - கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை, நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.;

Update: 2020-11-28 23:26 GMT
நெல்லை,

ஓட்டல்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி மூலம் பயோ டீசலாக மாற்றும் திட்ட தொடக்க விழா, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் விஷ்ணு தலைமை தலைமை தாங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் நெல்லையில் உள்ள பல்வேறு ஓட்டல்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது.

நெல்லை மாவட்டத்தில் தினமும் உணவு உற்பத்திக்காக ஓட்டல்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை, நீர்நிலைகளில் கொட்டுவதுடன், சிறு கடைகள் அதனை வாங்கி உணவுப்பண்டங்களை தயாரிப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதனை தவிர்க்கும் பொருட்டு ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து அதனை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ஓட்டல் நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக் கேன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் எண்ணெயை சேகரித்து வழங்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் எண்ணெயின் தரத்திற்கு ஏற்ப ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.25 வரை வழங்கப்படும்.

இதற்காக எண்ணெயின் தரத்தை அளவிட புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சேகரிக்கப்படும் சமையல் எண்ணெயை ஆந்திர மாநிலத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இவை பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சிறிய கடைக்காரர்கள் 2-வது முறையாக எண்ணெயை உபயோகிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்